Sunday, February 8, 2015

குல தெய்வம்

[ படித்ததில் பிடித்தது ] 

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின்
பெருமை என்ன...?
குலதெய்வம்
விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
என்பவைகளை பற்றி.
சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!!
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன்
பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்
வரிசையில், மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால்
உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும்
ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த
வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின்
வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.
எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்
சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,
ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல
அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த
விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த
கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்
போகாமலும் இருக்கலாம்.
அதற்கு உத்தரவாதமில்லை.
ஆனால், குலதெய்வ
கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற
ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்
அங்கு கொண்டு செல்லப்பட்டு,
முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும்
காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும்
படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ
சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம்
பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த
விதத்திலாவது உருவாக்க முடியுமா?
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின்
பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை
இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம்
இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல்
அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?
இந்த வழி வழி போக்கில் ஒருவர்
மூட்டை மூட்டையாக
புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம்
அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக
வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம்
முன்னோர்களும் பித்ருக்களாக
இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
குலதெய்வம்
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ
வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும்
சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன்
சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம்
என்று அலட்சியப் படுத்தக்கூடாது.
எமன் கூட
ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான்
உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும்
கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க
சென்றாலும் குறிசொல்பவர் நம்குல
தெய்வத்தை அழைத்து அதனிடம்
கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல
முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக
எதையும் சொல்ல முடியாது.
இதை உணர்ந்த
மந்திரவாதிகள்
ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில்
யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம்
கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.
மந்திரவாதிகள் தாங்கள்
வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின்
குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில்
பெற்று விடுகிறார்கள்.
மந்திர
கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும்
உண்டு. அவை அந்த
மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும்
கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்
படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம்
முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள
குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பிறந்த
வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.
பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை
செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும்
காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால்
பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில்
வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல
வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ
வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம்
இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்
இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த
ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள்
குலதெய்வத்தின்
கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம்
ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக
ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
பூஜைகள் நடைபெற
ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற
தன்மையை போதிக்கிறது,
அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம்
மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த
குலதெய்வம் மனிதன் லௌகீக
வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13
வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க
முடியாது என்பது தெய்வக்கணக்கு.
ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின்
வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ,
அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச
விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது
காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.
ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13
வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு
இருக்கும்.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக்
காண்போமா.....?
விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா,
பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள்
உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23
தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா,
பெண்ணா என்பதைத் தந்தையின்
க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx
க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட
க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின்
x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x
சேர்ந்தால் பெண் குழந்தையும்
பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக்
கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.
ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ,
ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர,
சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம்
சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.
ஏனெனில்
பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம்
இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும்
ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y
க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம்
இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில்
அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப்
போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க
வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்
தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும்
விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்
பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம்
குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x
க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன்
தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x
க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.
ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y
க்ரோமோசோம்கள் பெண்களுக்குக்
கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம்
இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.
ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத்
தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.
பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள்
கிடைப்பதில்லை.
ஆணின் y க்ரோமோசோம்கள்
ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும்
தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள்
அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச்
சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்
கொண்டிருக்கிறதாம்.
13 தலைமுறைக்கு மேல்
அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால்
ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும்
ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும்,
பரம்பரை நோய்கள் தொடர
கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
உறவுகளுக்கிடையே திருமணம்
தவிர்க்கப்படுகிறது ...

Friday, December 19, 2014

சங்ககாலச்சேதி

சங்ககாலத்தில்... என்றாலே ஓடிவிடுகிறான் இன்றைய தமிழன்.
"வரலாறு" படிப்பது ஏன் என்று கொஞ்சம் பார்ப்போமா?
நேரடியாக மோதமுடியாத வல்லரசான ரோமன் பேரரசை சுற்றுப்பாதையில் சென்று ஆல்ப்ஸ் பனிமலையை ஏறி இறங்கி ஹனிபல் நிர்மூலமாக்கினான்.
இது நடந்து 2000 ஆண்டுகள் கழித்து மாவீரன் நெப்போலியன் அதேபோல ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சுற்றுப்பாதையில் சென்று ஆஸ்திரியாவை வென்றான்.
ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான்.
பிறகு நெப்போலியன் ரஷ்யநாட்டின் மீது குளிர்காலத்தில் படையெடுத்துச்சென்றதால் தோற்றான்.
இதுநடந்து 150ஆண்டுகள் கழித்து ஹிட்லர் ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான். நெப்போலியனின் வரலாறை ஹிட்லர் கவனத்தில் கொண்டிருந்தால் வெற்றி மேல் வென்றி குவித்த நாஜிப்படைகள் வலிமைகுறைந்த ரஷ்ய படையிடம் குளிர்காலத்தில் தோற்று மண்ணைக்கவ்வியிருக்காது.
பழங்காலத்தில் நடந்ததை அறிவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தவே ஐரோப்பாவரை செல்லவேண்டிவந்தது.
மற்றபடி இந்தப் பதிவு போர்பற்றியது அன்று. நாகரீகம் பற்றியது. இல்லறம் பற்றியது.
-----------------
சங்ககாலத்தில் குடும்பம் என்கிற அமைப்பு தோன்றாதபோது கூட்டமாக வாழ்ந்த இனங்களில் எவரும் எவருடனும் சேர்ந்து பிள்ளைபெறலாம் என்ற நிலை இருந்தது.
பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற முறை, திருமணம், நிலையான இடத்தில் வாழ்க்கை, குடும்ப அமைப்பு ஆகியன தோன்றின.
ஆனாலும், பழைய முறைப்படி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தவர்களும் இருந்தனர். இப்படிப்பட்டோர் பரத்தை என்றும் இவர் ஊரில் வாழ்ந்த பகுதி 'பரத்தைச் சேரி' (சேரி=சேர்ந்துவாழும் இடம்) அழைக்கப்பட்டது.
இவர்கள் குடும்பமாக வாழ்வோரைப் போலவே மதிக்கப்பட்டனர்.
--------------
பரத்தை ஒருத்தி தன் தோழியிடம் தன்னை நாடிவரும் தலைவனைப் பற்றிக் கேலியாகப் பின்வருமாறு கூறுகிறான்.
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
(குறுந்தொகை:8)
என் வீட்டிற்கு வந்தால், "தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான். ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்.
பரத்தைக்குத் தலைவன் வீட்டுக்குச் சென்றுவரும் உரிமைகூட இருந்ததோ என்னவோ?
----------------------
தலைவன் பரத்தையை நாடிச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறான். அவனை வீட்டுவாசலிலேயே நிறுத்தி தலைவி கேள்வி கேட்கிறாள். தலைவன் உடனே தலைவியின் காலில் விழுந்து தான் பரத்தை வீட்டுக்குச் சென்றது தவறுதான் என்றும் அதற்காக பொறுத்தருளுமாறும் மன்றாடுகிறான். உள்ளம் உருகிப்போன தலைவி அவனை தூக்கி "நீ இப்படிக் காலில் விழுவதை நீ காதல் கொண்ட என் தங்கைகளான பரத்தைகள் கண்டால் சிரிப்பார்களே?!" என்று கேலியாகக் கூறுகிறாள்.
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என...
தொல்காப்பியம் (கற்பியல்:6)
பரத்தைகளை தங்கைகள் என்று அக்காலப்பெண்கள் குறிப்பிடும் அளவுக்கு அப்பெண்களுக்கு மதிப்பு இருந்துள்ளது.
---------------
மேற்கண்ட இருபாடல்களிலிருந்தும் ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு அடங்கிநடந்தது தெரிகிறது. அதுபோல, அக்காலத்தில் வேட்டையாடுதலிலும் போர்புரிவதலிலும் ஆண்கள் ஈடுபட்டதால் ஆண்களின் உயிரிழப்பு பெண்களின் உயிரிழப்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்திருக்கும். அப்போது தலைவன்(கிழவன் அதாவது ஆண்) தலைவி(கிழத்தி)யை மணமுடித்தோடு காமக் கிழத்தி (வைப்பாட்டி)கூட வைத்துக்கொண்டனர்.
அப்போதைய சூழலுக்கு அது சரியாக இருந்தது.
இதனால் பெண்கள் அடிமைநிலையில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
திருமணச்சீர் (வரதட்சணை) வாங்கும் பழக்கமானது அப்போது இல்லை. மாறாக பரிசம் (பணம்) கொடுத்து மணப்பெண்ணை அழைத்துவரும் முறை இருந்துள்ளது.
-------------------
பரத்தைப் பெண்கள் மட்டுமன்றி ஆண் பரத்தர்களும் இருந்துள்ளனர்.
பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
திருக்குறள்:1311
'புலவி நுணுக்கம்' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் பெண்கள் எப்படியெல்லாம் சின்னச் சின்ன காரணங்களைக்கொண்டு தலைவனிடம் ஊடல் செய்வார்கள் என்று விவரிக்கிறார். அதில் மேற்காணும் குறள் வருகிறது.
தலைவனை பெண்கள் பலரும் விரும்புவதைக் கண்டு பொறாமை கொண்டு தலைவி தலைவனிடம்,
பெண் இயல்பு உள்ள அனைவரும் பொதுப்பொருள் போல உன்னை தன் கண்களால் விழுங்குகிறார்கள் (பார்த்து ரசிக்கிறார்கள்) பரத்தனுக்கு ஈடான உன்னை (உன் மார்பை) நான் இனித் தழுவமாட்டேன்" என்று சினந்துகூறுகிறாள்.
சிலப்பதிகாரத்தில் . "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்ற சொற்றொடர் வருகிறது.
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது, கவுந்தியடிகளும் சேர்ந்துகொண்டார். அப்போது வழியில் இரு பரத்தர்கள் அவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, சங்ககாலத்தில் தமிழர் வாழ்வியலில் பெண்ணடிமை நிலவியதாகக் கூறவியலாது.
கற்பு என்பது காலத்திற்கு காலம் மாறுவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.
போரும் அரசியலும் கற்பியலும் மிகப் பழமையானவையும் நெருங்கிய தொடர்புடையவையும் ஆகும்.
Politics is war without blood,war is politics with blood.
Politics is the second oldest profession,and the first is prostitution.

வெளிவேலை[OnSite]

“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
 “No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
 “yeah…I could have been… But…”
        ‐இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரீல ஒரு நாளைக்கு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துலே பேசிட்டு இருப்பாங்க..

 “அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க, நமக்கெங்க, கருமம் அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க”ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க.. 

“ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
      ‐சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்ப‌ற அளப்பறய குடுத்திட்டிருப்பாங்க…

  "ஆன்சைட்" ‐ மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யா"வசியமான" ஒரு வார்த்தை.

 சரி, ஆன்சைட்னா என்னாங்க?

ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேல ஆகனும்னா…இந்த மாதிரி, இந்த மாதிரி வேல ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பேனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு மன்னன் படத்துல வர்ர‌ ரஜினி, கவுண்டமணி மாதிரி  “எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு” அடிச்சிகிட்டு, அப்புறம் கெடைக்கற பீஸ் ஆப் ப்ராஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்டுக்கு பூஜையைப்போட்ருவாங்க. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும், எப்டெப்டி வேணும்னு பக்கத்துலேய இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்டே வேலைய (உயிர) வாங்கற process தான் Onsite‐Offshore co‐ordination.

 இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான். கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க.

 இப்போ அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…

சரி, அப்படி போறதுனால என்னங்க ?…

நல்லா கேட்டிங்க போங்க...

 ** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!.
 ** நம்ப negotiation skills ம், business communication ம் நல்லா இம்ப்ரூவ் ஆகும்!.
 ** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கிடைக்கும்.
 ** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட சில பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்… ( அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.) 

அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த central park, சுதந்திர தேவி சிலை, டவர், பிரிட்ஜ், பிரமிட், ரோடு இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறச்சு பார்த்து சில ஸ்டில்லு, பல செல்ஃபிகல எடுத்து மொத வேலயா ஃபேஸ்புக்குலயோ, வாட்ஸாப்புலயோ, பிக்காசலேயா போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்.

இங்க அவனவன் 38 degree வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow-ல வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.

மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource-அ ஆன்சைட் அனுப்பறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரிதான், "மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா, போகப்போக பழகிரும், மத்தபடி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருக்கம்"ங்கற மாதிரி, இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட்கிட்ட சொல்லி எப்படியாவது ஆன்சைட் அனுப்பிருவாங்க.

 "அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களா"ங்கற மாதிரி சீனியர் resourse-அ வச்சு கிட்டு ஜூனியர் resourse யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க.

 Project வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு ”நம்ப கிட்ட ஏற்கெனவே குழாய்வழியா (Pipeline-ல) இருந்த “வருமோவராதோ” Project வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிக்கோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் "நெசமாத்தான் சொல்றியா"னு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ‍‍-ரெகார்டிங் இல்லாமயே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு “ஏங்கடாபோங்கடா” ப்ராஜெக்ட‌ கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க.

அப்பறம் கொஞ்ச நாளைக்கு “வார்த்தை தவறிவிட்டாய்”ன்னு ஸ்லோமோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..

ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலயும் அவுல போட்ட மாதிரி ஆயிரும், அவன் போவான்- இவன் போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லயே கெளம்பி போயிருப்பான். 

“ஒன் டே Match-ல ரெய்னாவுக்கு பதில லஷ்மணனை எதுக்கு எடுத்தாங்க” ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அதப்பத்தி பேசிட்டு அதுக்கப்புறம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.
மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலைநோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க.


 ஆன்சைட் போனவன் “அக்கறை சீமை அழகினிலே”, "நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்”னு பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டெயின் பண்ணிகிட்டிருப்பான். நம்பாளு “சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு, இந்தியன் என்பது என்பேரு” ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.


 சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்பளே இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்.

இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம்(highlight) என்னன்னா ஒரு கம்பேனி எத்தன விசாவ consulate ல submit பண்ணாலும், வருசத்துக்கு இவ்ளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு. அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்.

இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே.

அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்கு"ன்னு இருக்கறவன் சந்தோசமா இருப்பான்.

 “இந்த சாப்ட்வேர் வேல எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன், இந்த US என்னோட 25 வருஷ கனவு, தவம்”னு கௌதம் மேனன் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!

அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்புச்சு, ஏன் போற, எதுக்குப்போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கிற மாதிரி நச் நச்‍னு கேட்டு, நமுக்கா கொடஞ்சு, குமுக்குனு நம்ப பாஸ்போர்ட்ல ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக, இல்லேனா மந்திரிச்சு உட்ட கோழி மாதிரி ஆயிருவானுக!

 சரி ஒரு வழியா விசா கிடச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன Project  இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா "அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அதுவரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பா"ன்னு கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த project வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியதுதான். இல்ல சினிமால சொல்றாப்ல “உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சு” ங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே.

இப்போ அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும். அப்ப‌டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான். அவங்களும் monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த monday னு அவங்களும் சொல்ல மாட்டாங்க, நாமளும் கேக்க மாட்டோம்.

வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவுடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு பர்ச்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம். Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.

இதுக்கெடைல நம்ப பாசக்கார பயபுள்ளைக அப்பப்போ போன் பண்ணி "மாப்ள, கண்டவெனல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரியவேண்டி இருக்கு"ன்னு பீலிங்க வேற போடுவானுக. இதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்.


 திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க ஊர்ல இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க. அவங்களுக்கு என்னன்னா நாம ஏதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலய பாப்போங்கறது நமக்குதான தெரியும்.

 ஆனா ஒன்னுங்க, இன்னிய வைரக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு‐பூகோளம்‐புவியியல் எதுவுமே இல்லைங்க.

 சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்மளோட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. ஆனா அந்த பரபரப்புல ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட‌ சந்தோசமா உக்காந்து பேச முடியாது.

 நாள்க்கணக்கு மணிக்கணக்கா ஆயிரும். கெளம்ப வேண்டிய கடைசி நாளும் வந்திரும்.

அந்த கடைசி நாள் "இந்தியா ‍பாகிஸ்தான் பைனல் ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வெச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரையா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டையும், உருண்டு பொரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு கடைசியா செய்ய வேண்டிய சீரு,அதாங்க நம்மோட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு, அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, கேக்க வெட்டி மூஞ்சில அப்பிகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மறக்காம வாங்கி(கட்டி)ட்டு (”மச்சி, இன்னிக்காவ‌து எப்படியாச்சும் அவகிட்ட சொல்லிடு”… கதைகளும் கேப்புல கெடாவெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்கை வரும்.

அதுதான் எல்லாம் கெடச்சிருச்சே அப்பறம் என்ன லைட்டான்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு, ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிட்டு போன பலபேரு காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா (டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட‌ மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருப்பாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம் நெறய இருக்கு, அது பெரிய கொடுமைங்க, என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு, தம்பி கிளையன்ட் சைடுல ஏதோ சூனியம் ஆயிருச்சு, போனவரைக்கும் போதும் பொட்டாட்ட‌ம் திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க.

அது சேரி நமக்கு நேரம் சரியில்லேன்னா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்.  இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பயப்பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும்.

 நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும். கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்.

விடியக்காலம் ப்ளைட்டுனா ராத்திரி பதினொரு மணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும். அதுக்கப்புறம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேச முடியும்!

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அம்மாச்சி போன போட்டு “உனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் பாத்து சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமி"ன்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவழ்ந்துருவாங்க.

 மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணசந்தம்ன்னா. “ஏண்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி”ன்னு எக்கோல ஒரு குரல் கேக்கும், முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம். டிக்கெட்ல அப்படித்தான் போட்ருக்கும்.


நம்ப பாசக்காரப் பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுக. ஏன்னா ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இவ்ளோதான் லக்கேஜ் எடுத்திட்டு போகணும்னு ஒரு கணக்கு உண்டு. அதிகம் ஆகி, 3 கிலோவ எடுத்திருங்கன்னு சொன்னா, ”மச்சி அந்த மைசூர் பாகும், பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராது? ன்னு நல்லவனுக மாதிரியே கேப்பானுக!! இதுவும் கூட ஒரு வகையான Give and take policy தான்.


 மணிக்கணக்கு நிமிசக்கணக்காயி, சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்.

பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க.
பயலுக வேற திடீர்னு ஏதோ சந்தானம் சூர்யாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரி “மச்சி பாத்துக்கோடா"ன்னு ஒரு மாதிரியான வாய்ஸ்ல பேசுவானுக!

நிமிசக்கணக்கு நொடிக்கணக்காயிடும்… மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் தருணமது!

கடைசி நொடியில்,

அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குப்பிறகு ஒரு அன்பு முத்தம்…
ஆருயிர் நண்பர்களின் கதகதப்பான தழுவல்கள்…

யாருக்கும் கண்களில் கண்ணீர்முட்டும் தருணமது!!

கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசத்து விடை கொடுத்துவிட்டு. எல்லா செக்யூரிட்டி, இமிக்ரேசன் சம்பிரதாயங்களையும் முடித்து விட்டு loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.

அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை உணர்வோம்.
ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்துக்கொள்ளும்.

சுருக்க சொல்லப்போனால்...

"நமக்குப்பிடித்த உண்மையான நம்மை வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயமான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரத்திற்கு, புது உறவுகளுக்கு நம்மை, நமக்கே தெரியாமல் அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்".

நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களை (உறவினர்கள் மற்றும், நண்பர்களின் திருமணங்கள், சொந்தவூர்ப்பண்டிகைகள், பங்காளிப்பஞ்சாயத்து, காவிரிக்குளியல், காலை நேர FM, மாலை நேர சீரியல், வயக்காடு கிரிக்கெட், இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கின் நகர்வலம் இப்படி நிறைய) தவறவிடுவோம்.

கடைசி நேர போன்களில் நேரம் கரைந்து கொண்டிருக்கும்.

ஒரு வழியாக ப்ளைட்டில் போர்டு ஆகி வயிற்றுந்துதலுடன் மெலெழும் போது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமிடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதைப்போலவே வெறுமையாக புலப்படும்.

 (சரி…புரியுது… என்னங்க பண்றது, நமக்குள்ள எப்பவுமே ஒரு தங்கர்பச்சான் தவழ்ந்துட்டே இருக்காப்புள‌!!..)

சில பேரு வெளிய ப்ளைட் சீட்ல வால்ட‌ர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல "துள்ளாத மனமும் துள்ளும்" விஜய் மாதிரி தேம்பித்தேம்பி அழுதிட்டு இருப்பானுக.

 சில பேரு இந்த LKG ஸ்கூல்ல மொத நாள் கொழந்தைக உக்காந்திருக்குமே "தேமே‍"னு அதே மாதிரியே கடைசி வரைக்கும் உக்காந்திருப்பானுக.

 சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி,கலக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவுடி பண்ணிட்டு இருப்பாங்க.

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான், ட்ரிங்க்ஸ் சர்வ் பண்ணா, ஏதோ வேப்பெண்ணய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு "நோ தாங்க்ஸ்.. ஐ யம் நாட் யூஸட் டு இட்”ன்னு சைடுல பாத்தபடியே ஒரு கோல போடுவான். அவ படக்குனு  ரெண்டு லார்ஜ் வாங்கி மடக்குனு குடிச்சிட்டு, வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா, நம்மாளு, வட போச்சேனு வின்டோவ பாக்க ஆரம்பிச்சுடுவான்.

பாதி தூக்கம், ஒரு படம், கொஞ்சம் இ[ம்]சைனு, நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் ( USA ன்னு வெச்சுப்போம் ‐ "ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க, இது ஒன்னுதான எனக்கு தெரியும்".)

லக்கேஜ் கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும். ஒரு வழியா நம்ப பொட்டிய கரக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.  அந்த ஊரு இமிக்ரேசன் செக்கிங்..

 நம்மளே "தீபாவளிக்கு திருடப்பட்டு வந்த கோழி மாதிரி" முழிச்சிட்டு நிப்போம், அப்போ ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு.

 “!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”

 (என்னது கொழாய்ல....ல... தண்ணி வரலயா? ) "பார்டன் மீ..

" “!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”

 (என்னது எம்.ஜி.ஆர் உயிரோட இருக்காரா?) "பார்டன் மீ.."

 “!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”

 ஓ….ஐ வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதயே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

 "பார்டன் மீ, பார்டன் மீ"ன்னு பத்து தடவ பாட்டு பாடி,
"எக்ஸ்கியூஸ் மீ, எக்ஸ்கியூஸ் மீ"ன்னு எட்டு தடவ எகத்தாளம் பண்ணி, பிங்கர் பிரிண்ட் வெச்சு,
போட்டோக்கு போஸ் குடுத்து,
ஒரு வழியா கேட்ட கேள்விக்கு சரியான பதில சொல்லி, அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு "தாத்தா தெரியராரு,தாத்தா தெரியராரு" நெலமதான். 

அப்புறம், நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விசேசம், இல்லேனா குஷ்டந்தான், திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான். அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எரும மாடு தெரியப்போகுது.) தட்டுத்தடுமாறி டாக்ஸி புடிச்சு நம்ப கலீக்கோட ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட‌ ஐக்கியமாயிர வேண்டியதுதான்.

ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:

** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனக்க்ஷ‌னோட ஒரு லேப்டாப்.
 நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம்,நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான்.  சாயங்காலம் வந்த உடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத்‍-துனு உக்காந்திர வேண்டியதுதான்.

அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:

 1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்..
             நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறம், கால்ல பட்டாவே, பத்துதடவ தொட்டு கும்புடுவம். 

2. காலநிலை மாற்றம்..
           வெயில் காலத்துல வெளிச்சமும், குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்த்தியா இருக்கும்.
            நீங்க சாயங்காலம் எவ்ளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் நேரத்துலயே வந்த மாதிரி ஃப்ரெஷ்சாவே இருக்கும். ஏன்னா வெயில் காலத்துல பத்துமணிக்கு தான் கொஞ்சம் லைட்டா இருட்டும். நைட் கொஞ்சம் லேட்டா பசங்களோட‌ பேசிட்டு இருந்தம்னா திடீர்னு விடிஞ்சிரும்.
       
           குளிர் காலத்துல இதுக்கு நேர்மாறு, மதியம் 3 மணிக்கெல்லாம் இருட்டீரும். எப்பவுமே நைட் ஷிப்ட்ல இருக்கற பீலிங் இருக்கும். கன்னிப்பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும், பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழ பெய்யும், அப்புறம் பாத்தா "இன்னிக்கா அப்படிப்பாத்தம்"ங்கறா மாதிரி சுள்ளுன்னு வெயிலடிக்கும்.


 வேல ரீதியா பாத்தா ஒன்னும் பெருசா வித்தியாசம் இருக்காது. அதே வேல, ஆனா வெள்ளைக்கார மொதலாளி. நமக்கு கிளையன்ட் நல்லபடியா அமையனும் அது ரொம்ப முக்கியம், அத விட முக்கியம் offshore team (அந்த எட்டு பேரு) சரியா வாய்க்கனும் இல்லேனா சிக்கி சீரழிய வேண்டியதுதான், விடிய விடிய உக்காந்து ட்ரான்ஸ்சிசன் குடுத்திட்டு காலைல திரும்ப வந்து கேட்டா “ராமனுக்கு பொண்டாட்டி ரம்பா”ன்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பயபுள்ள.


நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,

 “அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”..
           - பொன்னி அரிசிலேருந்து முருங்கக்கீரை வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.


 பய, ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறத தவிர எல்லா வேலயும் துல்லியமா செய்வான்! வேற வழி?

 நம்முடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திருக்கும். குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக.

 பசங்க நாலு பேரு ஒரே வீட்ல‌ இருந்தாலும் கூட, ஒரு அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது எரியும்.

சரீ, பிரச்சன திசை மாறுது…

 அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்ல‌லே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா "பனியில நனஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட அந்த வெள்ளைக்கார தேவத நல்லா பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்… அசிங்கத்த மிதிச்ச மாதிரி அலறி ஓடி, அப்புறமாதான் அடங்குவான்…

 வெள்ளக்கார‌ன பொருத்தவர ஒவ்வொரு வீக்கெண்டும் தீபாவளி மாதிரிதான். திங்கக்கிழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா இருப்பானுக. வெள்ளிக்கிழம சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக. 5 மணியில இருந்தே "கோட்டய விட்டு வேட்டைக்குப்போகும் கொடலமல சாமி"னு, அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்புவாங்க. வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

 நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும். இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!


 இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு மாசத்துக்குத்தான்.

ஐஸ்வர்யாராயே பொண்டாட்டியா வந்தாலும், அந்த பெருமை, சந்தோசமல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்கறா, ஒரு சைடா நடக்கறான்னு எதாவது கொற சொல்ல ஆரம்பிச்சிருவோம்.

பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி.....

"நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை,
 எவனோ எழுதி வெச்ச time schedule-ல,
விருப்பு வெறுப்புகளை மறந்து,
இன்னொருத்தனோட வேலைக்காக ஓடி ஓடி, போர் அடிக்க ஆரம்பிச்சிரும்.

நாம ஊருக்கு திரும்பிப்போற நாளப்பத்தி கற்பனை பண்ண ஆரம்பிச்சிருவோம்.

 மொத்தத்துல இந்த நண்டு, சிண்டு, வண்டு "ஜெகன்" ஸ்டைல்ல சொல்லனும்னா,

ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, 

"உள்ள இருக்கறவன் வெளிய வரனும்னு நெனப்பான், 
வெளிய இருக்கறவன் உள்ள போகனும்னு நெனப்பான்."

Monday, May 30, 2011

பழைய நிறம்

"பழைய நிறம்"

பனிக்காலத்தின் வெளுப்பும்,
வழலை,குழுமத்தின் வனப்பும்,
செஞ்சூரியனின் ஒருநாக்கதிரில் - சுறுண்டதால்
என்மேல் பார்க்கிறேன் - என்
பழைய நிறம்.

Saturday, June 20, 2009

இளை(சை)யராஜா !

இளையராஜா ஒரு இசை சாம்ராட் .
இளையராஜா இசைக்கு இசையாதோர் யாரோ.
இளையராஜா சுவாசிப்பது காற்றை அல்ல, இசையை.

மிக சிறந்த இசைக்கருவிகள் உதவியோடு தன் இதயத்தில் உதித்த இசையை மக்கள் இன்புற வெளியிட்டு விட்டு, அந்த இசைக்கு அவர் வைத்த பெயர் 'ஒன்றும் இல்லைங்க வெறும் காத்து ', அதாவது 'Nothing But Wind'.

அப்படி இல்லை என்றால் சிறந்த இசைப்பாடல்களை தந்து விட்டு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் வைத்த பெயர், 'எப்படிப் பெயர் வைப்பது ?', அதாவது 'How to Name it ?' எனவாக பெயர் வைக்க குழம்பியவர்.

கலைஞர் ஒருவருக்கு பெயர் சூட்டுகின்றார் என்றால் அதில் எப்போதும் ஒரு ஆழமான பெயர் காரணம் இருக்கும். அந்த பெயர் காரணமும், பெயர் சூட்டப் படுபவரின் செயல் காரணத்தை அடிப்படையாய் கொண்டு இருக்கும். கலைஞர் எப்போதும் சும்மா பேருக்கு பெயர் வைப்பவர் இல்லை. இதை நாம் உண்மை என்று உணர்ந்து கொள்வதற்கு, கலைஞர் இளையராஜாவுக்கு சூட்டிய 'இசைஞானி' எனும் பட்டமே சாட்சி.

இளையராஜா, தேனி மாவட்டம் தந்த, பண்னையபுரம் பெற்று எடுத்த இசைப் புத்தகம். இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க ஆனந்தம். ஆம், இவரும் கிராமத்துக் குயில்தான்.

நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்து மூன்று இளைஞர்கள் கனவுகளை மட்டும் கை இருப்பாய் கொண்டு, தங்கள் திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து,உழைப்பை மட்டுமே மூலதனமாய் கொண்டு, சென்னை நகரம் வந்தனர். அவர்களை தமிழ் திரை உலகின் மும்மூர்த்திகள் எனலாம், அவர்கள் வைரமுத்து, இளையராஜா மற்றும் பாரதிராஜா.

அவர்களுக்குள் இருந்தது திறமை மட்டும் அல்ல, வெறி. திறமைகளை வெளிப்படுத்த வெறி.
இவர்களில் இளையராஜா, முத்தமிழாம், இயல் இசை நாடகத்தில், இரண்டாம் தமிழாம் இசைத் தமிழை பெருமைப் படுத்தி உளார்.

அக்கால இளைஞர்களுக்கு 'அன்னக்கிளி' ஆகட்டும், மத்தியகால இளைஞர்களுக்கு 'தேவர் மகன்' ஆகட்டும், இக்கால இளைஞர்களுக்கு 'சீனி கம்' ஆகட்டும், அன்றும் இன்றும் என்றும் அவர் இசையில் ராஜா தான்.
இசை உலகின் முடி சூடா மன்னன்; இனிய ராஜா; இசை ராஜா தான் இளையராஜா.
அவர் இசை மேஸ்ட்ரோ, இசை மேதை. இளையராஜாவுக்கு இசை தான் எல்லாம்.

காலத்தை பிரித்து அறிய கி.மு(கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) என்று கூறி விடலாம். தமிழ் திரை இசையைப் பிரிக்க இ.மு. என்றும் இ.பி என்று கூறலாம். இ.மு இளையராஜாவுக்கு முன். இ.பி இளையராஜாவுக்கு பின்.

தமிழகத்தில் எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் கதை திரைக்கதை தயாரிப்பாளர் வசனம் இயக்குனர் போன்ற பெயர்கள் மாறி மாறி வந்து கொண்டு இருந்தன, ஆனாலும் இசை என்ற பெயருக்கு மட்டும் மாறாமல் இருந்த ஒரு பெயர் இளையராஜா.

'திருவாசகம்' தமிழ் புத்தகத்தில் மட்டும் கேள்விப் பட்டு இருந்த இளைஞர் கூட்டத்திற்கு, அவர் இசையின் மூலம் மீண்டும் வெளிச்சம் காட்டி இருக்கின்றார்.
திருவாசகத்திற்கு உள்ள பெருமை, திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசத்திற்கும் உருகார்.
அதைப் போலவே, இளையராஜா இசைக்கு உருகாதோர் ஒரு இசைக்கும் இசையார்.
இவ்வாறு இருக்கையில் இளையராஜா இசையில் திருவாசகம் கேட்க என்ன வென்று சொல்லுவது.
கரும்பு தின்ன கூலியா..........

சாதிப் பிரிவினை பார்ப்பதே தப்பு. இதிலும் சாதிப் பிரித்து திறமை பார்ப்பது மகா பாவம்.
இதற்கு மேலும் சாதி த்வேஷம் கொண்டு திறமை மதியா மனிதர் தலையில், வங்கக் கடலில் விழ வேண்டிய இடிகள் நங்கென்று நெஞ்சில் விழக் கடவதாக. வங்கக்கடல் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறது என்போருக்கு நாம் சொல்லி கொள்வது, வங்கக் கடல் தூரத்தில் தான் இருக்கிறது, ஆனால் அந்த இடிகள், கூகிள் மேப் (Google Map ) உதவியோடு உங்களைக் கண்டு பிடித்து விடக் கூடுவதாக.

ஒரு சில புல்லுருவிகள் அவர் அந்த சாதி, இந்த சாதி என்று அவரை சிறுமை படுத்தப் பார்க்கின்றனர்.
அப்படிப் பட்டோர்க்கு அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
'அடப் பதர்களே ..... இளையராஜாவின் இசையை இரவில் கேட்டு நிம்மதியாய் தூங்கும் அற்ப மானிடர்கள் நீங்கள், அவரையே சாதி பிரித்து ஏசும், நீங்கள் தான் கீழ்ப் பிறவி.அவர் நீயும் நானும் அறியா சாதியை சேர்ந்தவர்'
இளையராஜாவின் சாதி இசை, அதிலும் உள் பிரிவு தமிழ் இசை.

தாளங்களும் ராகங்களும் இவர் கடைக்கண் தங்கள் மேல் படுமா என்று ஏங்கி தவிக்கின்றன.
அவர் வாங்கிய விருதுகள் ஏராளம். ஆனாலும் அவர் விருதுக்கு இசைப்பவர் அல்ல.
விருதுகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. விருதுகள் அவருக்கு ஒரு பொருள் அவ்வளவு தான்.
அவர் உலகம் தனி உலகம்.... அந்த இசை உலகில் தான் எப்போதும் சஞ்சரித்து கொண்டு இருப்பார்.
அவ்வப்போது அவர் ஆசை பட்டால் இப்பூவுலகிற்கு வருவார். அதுவும் அவர் பெற்ற இசையை, பெருக இவ்வையகம் என்பதற்கு தான் இருக்கும்.

இளையராஜா தன் மானசீக குருவாக கொள்வது மூவரை, அவர்கள் மேல் நாட்டு இசை மேதைகள் Beethoven, Bach மற்றும் Mozart.

மேதைகளின் திறமைகள் இன்று இரவு படுத்து நாளை காலை விழிக்கும் போது உருவாவது இல்லை. அதாக பட்டது தமிழ் திரைப்படங்களில் வருவது போல் ஒரே பாடலில், அதுவும் ஐந்து நிமிடத்தில் வருவதும் இல்லை.
மேதைகளின் திறமை தினம் தினம் பட்டை தீட்டப்பட்டு, பின் பல நாள் கழித்தே பார் அறியும் வண்ணம் வரும். இளையராஜாவும் இப்படித்தான். தன் 14வது வயதிலேயே நாடோடி இசைக்குழுவில் சேர்ந்து தென் தமிழகத்தை சுற்றி வந்தவர். பல வருடம் கழித்தே அவர் இசை புகழ் தமிழ் நாடறியும் வண்ணம் வந்தது.

இப்போது உலகறியும் வண்ணமாய், BBC -யில் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக, இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ராக்கம்மா கைய தட்டு' பாடல் பலராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா இசை அமைத்த நானூறாவது திரைப்படம் நாயகன், ஐநூறாவது படம் அஞ்சலி.
ஆயிரம் எப்போது வரும் என்று நாம் காத்து கொண்டு இருகின்றோம்.

உணவிற்கு பெயர் பெற்ற சரவணா பவன் ஹோட்டலுக்கு, பின் மாலைப் பொழுதில் சென்ற பொழுது, உணவு விடுதியில் இளையராஜா பாடல்கள் ஒலிபரப்பி கொண்டு இருந்தது.
என்ன இனிமையான பாடல்கள் .. எல்லாம் முத்தான பாடல்கள்....
அய்யன் வள்ளுவர் கூறியது,
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

வள்ளுவன் கூறியது கேள்வி செல்வம் என்றாலும், நாம் அப்போது இரு செவியையும், இருக்கும் ஒரே இதயத்தையும் இளையராஜாவிடம் கொடுத்து விட்டு, சர்வரிடம் ஒரு தோசை சொல்லியாயிற்று. தோசை வர தாமதம் ஆயிற்று. அதைப் பற்றி நமக்கேன் கவலை, அதுவும் இளையராஜா இசைத்து கொண்டிருக்க.

திடீரேனே ஒரு தடங்கல். வேறென்ன, தோசை வந்து விட்டது. தட்டு தடால் என மேஜையில் வைக்க படுகிறது. ஒரே அபஸ்வரம் ... இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இசையை அனுபவித்து கொண்டே உண்கிறோம்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து சர்வர் வருகின்றார், இசையின் நடுவே, வேறு எதுவும் வேண்டுமா என்று வினவுகின்றார். நாம் ஒன்றும் வேண்டாம் என்கின்றோம். இசையை ரசித்து கொண்டே உணவை உண்டு முடித்த பின்னும் சர்வர் இசையை இடை மறிக்கும் விதமாய், 'வேறென்ன சார்' என்கின்றார்.
நாமோ பொறுமை இழந்து, 'இப்போ சாப்பிட்ட பில்லை கான்செல் பண்ணி விடுங்கள் சார்' என்கின்றோம். சர்வர் நகர்ந்து செல்கின்றார்.
நாம் மீண்டும் இசையை ரசிக்கின்றோம்.

இயற்கை என்றுமே அவர் இசைக்கு இணைந்து கை கொடுக்கும். எங்கெல்லாம் வார்த்தை வெற்றிடம் வருகின்றதோ, அங்கெல்லாம் ஓரமாய் ஒரு குயில் குதூகலமாய் கூவிக் கொண்டு இருக்கும். ஒரு மயில் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டும் இருக்கும்.

சில இசை அமைப்பாளர்களுக்கு மின்சாரம் இல்லை என்றால் இசை அமைக்க முடியாது, ஏன் என்றால் அவர்கள் மேற்கத்திய கருவிகளை சார்ந்திருப்பதால். அதிலும் சில இசை அமைப்பாளர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு மின்சாரமும் வேண்டும், ஆங்கில இசை குறுந்தகடுகளும் வேண்டும், கூடவே கூகுள் (Google) வேண்டும். பின்னே இசையை எங்கே தேடுவதாம். நீங்களா அவருக்கு இசை அமைத்து கொடுப்பீர்கள்.
ஆனால் இளையராஜாவால் மின்சாரம் இருந்தாலும் இல்லா விட்டாலும் இசை அமைக்க முடியும். அவருக்கு கருவிகள் ஒரு பொருட்டே அல்ல. அந்த ஹார்மொனியும் மட்டும் போதும்.

வள்ளுவன் வாக்கு என்ன வெனில்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. என்கின்றார்.
இந்த குறளை இளையராஜாவிற்காக இடை செருகல் சேர்த்தால்,
இசை ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, இசையை கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. எனக்கூறலாம்.........


cheers,
karthi

Tuesday, June 16, 2009

வீரியமுள்ள விதை !!


நிலை: ( முதுகலை ) கல்லூரி நாட்கள்...
எழுதப்பட்ட வருடம்: 2002
குறிப்பு: காதல் சொல்லப்பட்டது, சொன்னது மறுக்கப்பட்டது. மறுப்பின் வலியும், மனத்தின் நிலையும் உருவகப்படுத்தப்பட்டது.

விதை...
வீரியம் தெரியாத விதை..
விளைவை தெரிவிக்காத விதை....

விதை விளைத்தேன் - அது
முளைவிட்டபோது..
உன்னிடம் காண்பித்தேன்..
வெட்டச்சொன்னாய் செடி வளர்ந்த பிறகு..
கண்ணீரை கனநேரத்தில் மறைத்தவனாய்..
வெட்டியே விட்டேன்...

மண்ணுள்ளே !!
வேர் மட்டும் உறுத்துவதறிந்த நீ
வேரோடு பிடுங்க முடியுமாவென்றாய்..

உனக்காக முடியுமென்று..
உண்மைக்கு புறம்பான நான்..
கண்ணீரை ஊற்றி...
செந்நீரால் நனைத்து..
பன்னீரில் கழுவி பிடிங்கினேன்...

....வலித்தது....

ஆனாலும் முயன்றேன்...
ஆஆஆ - பிடிங்கியே விட்டேன்...

.
.
.
காலங்கள் கழிந்தன...
நாட்கள் நகர்ந்தன...
.
.
.
பல நாட்களாக,
உள்ளுக்குள்
ஏதோ....
உறுத்தியதறிந்தும்
ஏதோ...
பலமிலந்த மண்ணின்
பலமான வேலையென்றிருந்து விட்டேன்..
ஏனெனில் -
பிடுங்கும்போது - வேர்
பிய்த்துக்கொண்டு வந்ததெனக்கு
விளங்கவில்லை..

வெளியே செடியை வெட்டியதாலும்....
உள்ளே வேரை பிடிங்கியதாலும்....

பலமிலந்த மண்..
பல நாட்களாய்...
பலவிதமான - நட்பு நீரை
பருகி நிலைத்தபோழ்து - அந்த
பாழாய்ப்போன பிய்ந்தவேர்...
முளை விடத்தொடங்கியது....

ஆயினும் இந்தமுறை...
அந்த மண் -
அந்த செடியை...
வளருவும் விடாமல்,
வேரைக்காயவும் விடாமல்...
வேரை உள்ளே பதுக்கி - செடியின்
வாசத்திலேயே வாழ விழைந்தது..

ஏனெனில்,
உனக்கு சுலபமாகவிருக்கலாம்.
'செடியை வெட்டிவிடு'...
'வேரை பிடிங்கிவிடு'.. - என்று கூற.

ஆனால் - இந்த
மண்ணுக்கு மட்டுமே தெரியும்,
வலிகள் என்னென்ன..
விளைவுகள் என்னென்ன...

இனி,
இங்கு,
களைகள் வளரவும் வழியில்லை..
காளைகள் மேயவும் இடமில்லை..

இவண்,
கார்த்தி.

அந்த வீரியமான விதையை விதைத்ததற்காக,
இந்த மண்ணுக்கு இந்தப்படைப்பு,
ஓர் அர்ப்பணிப்பு !Monday, June 15, 2009

'கன'வலை-யில் ஒரு கவியலை !!

நிலை: ( முதுகலை ) கல்லூரி விடுதி, அன்றைய நிகழ்வுகளின் நினைப்பில்...
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: தலைப்பில் குறிப்பிட்டதுபோல, காதல்-ஏற்கப்பட்டால் 'கனவின் அலை'யாகவும், மறுக்கப்பட்டால் 'கனமான வலை'யாகவும் மாறும்.. ஆக, மறுப்பின் பயத்தால் சொல்லவேண்டியதை சொல்ல முடியாமல் போனபோது எழுதபெற்றது...


பல நாட்களாக...
பல நிலைகளாக...
பல நினைவுகளாக...

வித்யாசமான அணுகுமுறையில்..
வித்யாசமான உணர்வுகளுடன் - ஏதாவது
வித்யாசமாக எழுத வேண்டும் - என்றெண்ணியதின்
விளைவால் விளைந்ததிந்த வித்யாசமான வரிகள்..

இந்த மாபெரும் முன்பக்கத்து வரிகளை எழுதவேன்,
இத்தனை தினங்களோ...

எத்தனை பாவப்பட்ட வெண்தாற்கள்,
நீலக்கறையோடு கசக்கியெறியப்பட்டனவோ !!
- இதையும் கற்பனையால் பார்க்கிறேன்..

கிறுக்கி கசக்கப்பட்ட வெண்தாள்கள்
கவிச்சோலையாய்.....
அவளின் தலைமுடியில்... பிரகாசிக்கிறது
வெண்ரோசாவாய்....

என் கைப்பிடியாகிய கவியாயுதத்திலிருந்து,
கவித்தாளுக்குள் கலைய மனமில்லாமல்,
கறையாமலிருந்ததால் - ஏற்பட்ட
உதறலில்,
கதறிச் சிதறிய
கருநீல மைத்துளிகள் - அவளின்
கரு'நீள'க்கண்களின் நீல மையாய்.

...................

ஆசையிருந்தும், அவளிடம் அன்பை சொல்லாமல்...
இப்படி,
கற்பனையால் மட்டுமே
விண்ணை எட்ட முடியும் - என்ற நிலையில்
கட்டுண்டு கிடக்கிறேன்.

இவண்,
கார்த்தி