Sunday, May 10, 2009

ஒரு கனவின் நினைவு

நிலை: முதன்முதலாக விடுதிக்காற்றை சுவாசித்தபோது.......
வருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)
குறிப்பு: விடுதி சேர்ந்த மகிழ்வும், வீட்டின் பிரிவும் ஒருசேர...... ஒரு கதம்பமான உணர்வின் விளிம்பில்.......

ஒருமுறையேனும்...
அனுபவித்துவிட வேண்டும்,
'விடுதி வாழ்க்கை' - என்றுதான்
விளையாட்டாய் நினைத்தேன்.

கனவுகள் நனவாக
கைவந்து சேர்ந்ததாய்
காற்றாய் வந்தது
கடிதம்.... பாரதியார் பல்கலையிலிருந்து.

எழுந்து ஆடினேன்,
எம்பி எம்பி குதித்தேன்.

இரண்டு ஒன்று போனது.

அன்று,
புறப்பட்டேன் நான் போருக்கு..
படிப்'போருக்கு' - இடம்தரும்
பாரதியார் பல்கலைக்கு...
ஆயுதங்களாக பெட்டிபடுக்கையுடன்
ஆயத்தமானேன் - போருக்கு.

பெற்றோரின்
பாசவுறைகளுடன்...
அண்ணா அண்ணியின்
அறிவுரைகளுடன்...
உற்றார் உறவினரின்
ஊக்குவிப்புடன்...
பழகிய பலரின்
பாராட்டுதலுடன்...
தெரிந்தோரின்
தைரிய வார்த்தைகளுடன்.

எனக்குத்துணையாக வந்தன,
பல ஆயுதங்கள்...,
பல துணிக்கவங்கங்கள்...,
பல நினைவுகள்...,
பல கனவுகள்...

வீட்டு வாசலை விட்டு வெளியேறி
வேகமாய் பயணித்து
விடுதியில் நுழைந்தேன்,
வீரனாக.....

இரவில் இருப்பில்லை...
பகலில் படிப்பில்லை..

அதிகாலையில் அம்மாவின்
அதட்டலில்....
அசால்டாய் எழுந்து..
அவசரமாய் புறப்பட்டு...
அடித்து பிடித்து பயணித்து...
ஆனந்தமாய் கல்லூரியில் நுழையும்
அந்த நாளின் ஞாபகம்
அழகாய் என் நெஞ்சில்...

கடமைக்காக சாப்பிட..
நட்புடன் நடந்தேன்
நடுவுணவறைக்கு...

பெரிதான தட்டில்..
அன்னமிட்டு அமர்ந்தேன்
அதன் நடுவில்...............

"அய்வரும் அழகாய் அமர்ந்து
அன்னத்தை அளந்த..
அந்த நாள் ஞாபகம்..

தேவையில்லாமல் தமக்கையை
தவிக்கவிட்டு..
தாளம் தட்டும் தினங்கள்"

கனவு கலைந்தேன்.

அனைவரும் அகன்றிருந்தனர்..
நான் மட்டும், அன்னத்தை அகற்றி
நடுதட்டை நோக்கியிருந்தேன்...

கண்ணீரில் கைகழுவி
கல்லூரி சென்ற என்னைப்...
'பகடிவதை' - என்ற பெயரில்
பாடாய் படுத்தினார்கள்..

அன்னையின் அரவணைப்பில்...
ஆசையாய் அயர்ந்திருந்த
பாசமான அந்த நாட்களை
படுத்தால் மட்டுமே - எண்ணிப்
பார்க்கக்கூடிய மனநிலையில்
படுத்துறங்ககூட முடியாமல்
பாரத்தை அநுபவித்துக்கொண்டே....
படுக்கிறேன்...........

- இவண்
கார்த்தி

No comments:

Post a Comment