Saturday, June 20, 2009

இளை(சை)யராஜா !

இளையராஜா ஒரு இசை சாம்ராட் .
இளையராஜா இசைக்கு இசையாதோர் யாரோ.
இளையராஜா சுவாசிப்பது காற்றை அல்ல, இசையை.

மிக சிறந்த இசைக்கருவிகள் உதவியோடு தன் இதயத்தில் உதித்த இசையை மக்கள் இன்புற வெளியிட்டு விட்டு, அந்த இசைக்கு அவர் வைத்த பெயர் 'ஒன்றும் இல்லைங்க வெறும் காத்து ', அதாவது 'Nothing But Wind'.

அப்படி இல்லை என்றால் சிறந்த இசைப்பாடல்களை தந்து விட்டு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் வைத்த பெயர், 'எப்படிப் பெயர் வைப்பது ?', அதாவது 'How to Name it ?' எனவாக பெயர் வைக்க குழம்பியவர்.

கலைஞர் ஒருவருக்கு பெயர் சூட்டுகின்றார் என்றால் அதில் எப்போதும் ஒரு ஆழமான பெயர் காரணம் இருக்கும். அந்த பெயர் காரணமும், பெயர் சூட்டப் படுபவரின் செயல் காரணத்தை அடிப்படையாய் கொண்டு இருக்கும். கலைஞர் எப்போதும் சும்மா பேருக்கு பெயர் வைப்பவர் இல்லை. இதை நாம் உண்மை என்று உணர்ந்து கொள்வதற்கு, கலைஞர் இளையராஜாவுக்கு சூட்டிய 'இசைஞானி' எனும் பட்டமே சாட்சி.

இளையராஜா, தேனி மாவட்டம் தந்த, பண்னையபுரம் பெற்று எடுத்த இசைப் புத்தகம். இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க ஆனந்தம். ஆம், இவரும் கிராமத்துக் குயில்தான்.

நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்து மூன்று இளைஞர்கள் கனவுகளை மட்டும் கை இருப்பாய் கொண்டு, தங்கள் திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து,உழைப்பை மட்டுமே மூலதனமாய் கொண்டு, சென்னை நகரம் வந்தனர். அவர்களை தமிழ் திரை உலகின் மும்மூர்த்திகள் எனலாம், அவர்கள் வைரமுத்து, இளையராஜா மற்றும் பாரதிராஜா.

அவர்களுக்குள் இருந்தது திறமை மட்டும் அல்ல, வெறி. திறமைகளை வெளிப்படுத்த வெறி.
இவர்களில் இளையராஜா, முத்தமிழாம், இயல் இசை நாடகத்தில், இரண்டாம் தமிழாம் இசைத் தமிழை பெருமைப் படுத்தி உளார்.

அக்கால இளைஞர்களுக்கு 'அன்னக்கிளி' ஆகட்டும், மத்தியகால இளைஞர்களுக்கு 'தேவர் மகன்' ஆகட்டும், இக்கால இளைஞர்களுக்கு 'சீனி கம்' ஆகட்டும், அன்றும் இன்றும் என்றும் அவர் இசையில் ராஜா தான்.
இசை உலகின் முடி சூடா மன்னன்; இனிய ராஜா; இசை ராஜா தான் இளையராஜா.
அவர் இசை மேஸ்ட்ரோ, இசை மேதை. இளையராஜாவுக்கு இசை தான் எல்லாம்.

காலத்தை பிரித்து அறிய கி.மு(கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) என்று கூறி விடலாம். தமிழ் திரை இசையைப் பிரிக்க இ.மு. என்றும் இ.பி என்று கூறலாம். இ.மு இளையராஜாவுக்கு முன். இ.பி இளையராஜாவுக்கு பின்.

தமிழகத்தில் எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் கதை திரைக்கதை தயாரிப்பாளர் வசனம் இயக்குனர் போன்ற பெயர்கள் மாறி மாறி வந்து கொண்டு இருந்தன, ஆனாலும் இசை என்ற பெயருக்கு மட்டும் மாறாமல் இருந்த ஒரு பெயர் இளையராஜா.

'திருவாசகம்' தமிழ் புத்தகத்தில் மட்டும் கேள்விப் பட்டு இருந்த இளைஞர் கூட்டத்திற்கு, அவர் இசையின் மூலம் மீண்டும் வெளிச்சம் காட்டி இருக்கின்றார்.
திருவாசகத்திற்கு உள்ள பெருமை, திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசத்திற்கும் உருகார்.
அதைப் போலவே, இளையராஜா இசைக்கு உருகாதோர் ஒரு இசைக்கும் இசையார்.
இவ்வாறு இருக்கையில் இளையராஜா இசையில் திருவாசகம் கேட்க என்ன வென்று சொல்லுவது.
கரும்பு தின்ன கூலியா..........

சாதிப் பிரிவினை பார்ப்பதே தப்பு. இதிலும் சாதிப் பிரித்து திறமை பார்ப்பது மகா பாவம்.
இதற்கு மேலும் சாதி த்வேஷம் கொண்டு திறமை மதியா மனிதர் தலையில், வங்கக் கடலில் விழ வேண்டிய இடிகள் நங்கென்று நெஞ்சில் விழக் கடவதாக. வங்கக்கடல் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறது என்போருக்கு நாம் சொல்லி கொள்வது, வங்கக் கடல் தூரத்தில் தான் இருக்கிறது, ஆனால் அந்த இடிகள், கூகிள் மேப் (Google Map ) உதவியோடு உங்களைக் கண்டு பிடித்து விடக் கூடுவதாக.

ஒரு சில புல்லுருவிகள் அவர் அந்த சாதி, இந்த சாதி என்று அவரை சிறுமை படுத்தப் பார்க்கின்றனர்.
அப்படிப் பட்டோர்க்கு அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
'அடப் பதர்களே ..... இளையராஜாவின் இசையை இரவில் கேட்டு நிம்மதியாய் தூங்கும் அற்ப மானிடர்கள் நீங்கள், அவரையே சாதி பிரித்து ஏசும், நீங்கள் தான் கீழ்ப் பிறவி.அவர் நீயும் நானும் அறியா சாதியை சேர்ந்தவர்'
இளையராஜாவின் சாதி இசை, அதிலும் உள் பிரிவு தமிழ் இசை.

தாளங்களும் ராகங்களும் இவர் கடைக்கண் தங்கள் மேல் படுமா என்று ஏங்கி தவிக்கின்றன.
அவர் வாங்கிய விருதுகள் ஏராளம். ஆனாலும் அவர் விருதுக்கு இசைப்பவர் அல்ல.
விருதுகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. விருதுகள் அவருக்கு ஒரு பொருள் அவ்வளவு தான்.
அவர் உலகம் தனி உலகம்.... அந்த இசை உலகில் தான் எப்போதும் சஞ்சரித்து கொண்டு இருப்பார்.
அவ்வப்போது அவர் ஆசை பட்டால் இப்பூவுலகிற்கு வருவார். அதுவும் அவர் பெற்ற இசையை, பெருக இவ்வையகம் என்பதற்கு தான் இருக்கும்.

இளையராஜா தன் மானசீக குருவாக கொள்வது மூவரை, அவர்கள் மேல் நாட்டு இசை மேதைகள் Beethoven, Bach மற்றும் Mozart.

மேதைகளின் திறமைகள் இன்று இரவு படுத்து நாளை காலை விழிக்கும் போது உருவாவது இல்லை. அதாக பட்டது தமிழ் திரைப்படங்களில் வருவது போல் ஒரே பாடலில், அதுவும் ஐந்து நிமிடத்தில் வருவதும் இல்லை.
மேதைகளின் திறமை தினம் தினம் பட்டை தீட்டப்பட்டு, பின் பல நாள் கழித்தே பார் அறியும் வண்ணம் வரும். இளையராஜாவும் இப்படித்தான். தன் 14வது வயதிலேயே நாடோடி இசைக்குழுவில் சேர்ந்து தென் தமிழகத்தை சுற்றி வந்தவர். பல வருடம் கழித்தே அவர் இசை புகழ் தமிழ் நாடறியும் வண்ணம் வந்தது.

இப்போது உலகறியும் வண்ணமாய், BBC -யில் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக, இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ராக்கம்மா கைய தட்டு' பாடல் பலராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா இசை அமைத்த நானூறாவது திரைப்படம் நாயகன், ஐநூறாவது படம் அஞ்சலி.
ஆயிரம் எப்போது வரும் என்று நாம் காத்து கொண்டு இருகின்றோம்.

உணவிற்கு பெயர் பெற்ற சரவணா பவன் ஹோட்டலுக்கு, பின் மாலைப் பொழுதில் சென்ற பொழுது, உணவு விடுதியில் இளையராஜா பாடல்கள் ஒலிபரப்பி கொண்டு இருந்தது.
என்ன இனிமையான பாடல்கள் .. எல்லாம் முத்தான பாடல்கள்....
அய்யன் வள்ளுவர் கூறியது,
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

வள்ளுவன் கூறியது கேள்வி செல்வம் என்றாலும், நாம் அப்போது இரு செவியையும், இருக்கும் ஒரே இதயத்தையும் இளையராஜாவிடம் கொடுத்து விட்டு, சர்வரிடம் ஒரு தோசை சொல்லியாயிற்று. தோசை வர தாமதம் ஆயிற்று. அதைப் பற்றி நமக்கேன் கவலை, அதுவும் இளையராஜா இசைத்து கொண்டிருக்க.

திடீரேனே ஒரு தடங்கல். வேறென்ன, தோசை வந்து விட்டது. தட்டு தடால் என மேஜையில் வைக்க படுகிறது. ஒரே அபஸ்வரம் ... இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இசையை அனுபவித்து கொண்டே உண்கிறோம்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து சர்வர் வருகின்றார், இசையின் நடுவே, வேறு எதுவும் வேண்டுமா என்று வினவுகின்றார். நாம் ஒன்றும் வேண்டாம் என்கின்றோம். இசையை ரசித்து கொண்டே உணவை உண்டு முடித்த பின்னும் சர்வர் இசையை இடை மறிக்கும் விதமாய், 'வேறென்ன சார்' என்கின்றார்.
நாமோ பொறுமை இழந்து, 'இப்போ சாப்பிட்ட பில்லை கான்செல் பண்ணி விடுங்கள் சார்' என்கின்றோம். சர்வர் நகர்ந்து செல்கின்றார்.
நாம் மீண்டும் இசையை ரசிக்கின்றோம்.

இயற்கை என்றுமே அவர் இசைக்கு இணைந்து கை கொடுக்கும். எங்கெல்லாம் வார்த்தை வெற்றிடம் வருகின்றதோ, அங்கெல்லாம் ஓரமாய் ஒரு குயில் குதூகலமாய் கூவிக் கொண்டு இருக்கும். ஒரு மயில் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டும் இருக்கும்.

சில இசை அமைப்பாளர்களுக்கு மின்சாரம் இல்லை என்றால் இசை அமைக்க முடியாது, ஏன் என்றால் அவர்கள் மேற்கத்திய கருவிகளை சார்ந்திருப்பதால். அதிலும் சில இசை அமைப்பாளர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு மின்சாரமும் வேண்டும், ஆங்கில இசை குறுந்தகடுகளும் வேண்டும், கூடவே கூகுள் (Google) வேண்டும். பின்னே இசையை எங்கே தேடுவதாம். நீங்களா அவருக்கு இசை அமைத்து கொடுப்பீர்கள்.
ஆனால் இளையராஜாவால் மின்சாரம் இருந்தாலும் இல்லா விட்டாலும் இசை அமைக்க முடியும். அவருக்கு கருவிகள் ஒரு பொருட்டே அல்ல. அந்த ஹார்மொனியும் மட்டும் போதும்.

வள்ளுவன் வாக்கு என்ன வெனில்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. என்கின்றார்.
இந்த குறளை இளையராஜாவிற்காக இடை செருகல் சேர்த்தால்,
இசை ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, இசையை கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. எனக்கூறலாம்.........


cheers,
karthi

Tuesday, June 16, 2009

வீரியமுள்ள விதை !!


நிலை: ( முதுகலை ) கல்லூரி நாட்கள்...
எழுதப்பட்ட வருடம்: 2002
குறிப்பு: காதல் சொல்லப்பட்டது, சொன்னது மறுக்கப்பட்டது. மறுப்பின் வலியும், மனத்தின் நிலையும் உருவகப்படுத்தப்பட்டது.

விதை...
வீரியம் தெரியாத விதை..
விளைவை தெரிவிக்காத விதை....

விதை விளைத்தேன் - அது
முளைவிட்டபோது..
உன்னிடம் காண்பித்தேன்..
வெட்டச்சொன்னாய் செடி வளர்ந்த பிறகு..
கண்ணீரை கனநேரத்தில் மறைத்தவனாய்..
வெட்டியே விட்டேன்...

மண்ணுள்ளே !!
வேர் மட்டும் உறுத்துவதறிந்த நீ
வேரோடு பிடுங்க முடியுமாவென்றாய்..

உனக்காக முடியுமென்று..
உண்மைக்கு புறம்பான நான்..
கண்ணீரை ஊற்றி...
செந்நீரால் நனைத்து..
பன்னீரில் கழுவி பிடிங்கினேன்...

....வலித்தது....

ஆனாலும் முயன்றேன்...
ஆஆஆ - பிடிங்கியே விட்டேன்...

.
.
.
காலங்கள் கழிந்தன...
நாட்கள் நகர்ந்தன...
.
.
.
பல நாட்களாக,
உள்ளுக்குள்
ஏதோ....
உறுத்தியதறிந்தும்
ஏதோ...
பலமிலந்த மண்ணின்
பலமான வேலையென்றிருந்து விட்டேன்..
ஏனெனில் -
பிடுங்கும்போது - வேர்
பிய்த்துக்கொண்டு வந்ததெனக்கு
விளங்கவில்லை..

வெளியே செடியை வெட்டியதாலும்....
உள்ளே வேரை பிடிங்கியதாலும்....

பலமிலந்த மண்..
பல நாட்களாய்...
பலவிதமான - நட்பு நீரை
பருகி நிலைத்தபோழ்து - அந்த
பாழாய்ப்போன பிய்ந்தவேர்...
முளை விடத்தொடங்கியது....

ஆயினும் இந்தமுறை...
அந்த மண் -
அந்த செடியை...
வளருவும் விடாமல்,
வேரைக்காயவும் விடாமல்...
வேரை உள்ளே பதுக்கி - செடியின்
வாசத்திலேயே வாழ விழைந்தது..

ஏனெனில்,
உனக்கு சுலபமாகவிருக்கலாம்.
'செடியை வெட்டிவிடு'...
'வேரை பிடிங்கிவிடு'.. - என்று கூற.

ஆனால் - இந்த
மண்ணுக்கு மட்டுமே தெரியும்,
வலிகள் என்னென்ன..
விளைவுகள் என்னென்ன...

இனி,
இங்கு,
களைகள் வளரவும் வழியில்லை..
காளைகள் மேயவும் இடமில்லை..

இவண்,
கார்த்தி.

அந்த வீரியமான விதையை விதைத்ததற்காக,
இந்த மண்ணுக்கு இந்தப்படைப்பு,
ஓர் அர்ப்பணிப்பு !Monday, June 15, 2009

'கன'வலை-யில் ஒரு கவியலை !!

நிலை: ( முதுகலை ) கல்லூரி விடுதி, அன்றைய நிகழ்வுகளின் நினைப்பில்...
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: தலைப்பில் குறிப்பிட்டதுபோல, காதல்-ஏற்கப்பட்டால் 'கனவின் அலை'யாகவும், மறுக்கப்பட்டால் 'கனமான வலை'யாகவும் மாறும்.. ஆக, மறுப்பின் பயத்தால் சொல்லவேண்டியதை சொல்ல முடியாமல் போனபோது எழுதபெற்றது...


பல நாட்களாக...
பல நிலைகளாக...
பல நினைவுகளாக...

வித்யாசமான அணுகுமுறையில்..
வித்யாசமான உணர்வுகளுடன் - ஏதாவது
வித்யாசமாக எழுத வேண்டும் - என்றெண்ணியதின்
விளைவால் விளைந்ததிந்த வித்யாசமான வரிகள்..

இந்த மாபெரும் முன்பக்கத்து வரிகளை எழுதவேன்,
இத்தனை தினங்களோ...

எத்தனை பாவப்பட்ட வெண்தாற்கள்,
நீலக்கறையோடு கசக்கியெறியப்பட்டனவோ !!
- இதையும் கற்பனையால் பார்க்கிறேன்..

கிறுக்கி கசக்கப்பட்ட வெண்தாள்கள்
கவிச்சோலையாய்.....
அவளின் தலைமுடியில்... பிரகாசிக்கிறது
வெண்ரோசாவாய்....

என் கைப்பிடியாகிய கவியாயுதத்திலிருந்து,
கவித்தாளுக்குள் கலைய மனமில்லாமல்,
கறையாமலிருந்ததால் - ஏற்பட்ட
உதறலில்,
கதறிச் சிதறிய
கருநீல மைத்துளிகள் - அவளின்
கரு'நீள'க்கண்களின் நீல மையாய்.

...................

ஆசையிருந்தும், அவளிடம் அன்பை சொல்லாமல்...
இப்படி,
கற்பனையால் மட்டுமே
விண்ணை எட்ட முடியும் - என்ற நிலையில்
கட்டுண்டு கிடக்கிறேன்.

இவண்,
கார்த்தி


எ(ஏ)ன் காதல் !!!

நிலை: கல்லூரிவிடுமுறை ( முதுகலை )
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: விடுமுறைவிட்டு, விடுதியில் நண்பியின் நினைவில்....................... நினைவிறுக்கங்கலின் நடுவில்..

வாழ்வா !!.. சாவா எதுவென்று தெரியாமல்...
வாலிபத்தில் ஒரு போராட்டம் - இந்த காதல் !

வெற்றி நிச்சயமென்று நிச்சயமில்லை..
ஆனாலும் -
நம்பிக்கையோடு.. இந்தப்பருவத்தில்,
வந்து விட்டது - இந்த காதல் !.

உணர்வுகளின் உந்துதல்..
உண்மையென்ற நம்பிக்கை..
அது -
பொய்யாகிப்போகும்வரை புரியாது - அதின்
இன்னொரு முகம்..

வெற்றி என்றும்,
தோல்வி என்றும்
புனையப்பட்டதால்..
காதலொன்றும் விளையாட்டல்ல....

அது - உணர்வுகளின் ஊற்று,
தோற்றாலும், செயித்தாலும்..
உயிருள்ளவரை வாழ்ந்தே இருக்கும்
உயிரில்......... இதுவே.. 'என் காதல்'

இவண்,
கார்த்தி

நினைவுத்துணை !!..

நிலை: கல்லூரிக்காலம் ( முதுகலை )
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: விடுமுறையில், விடுதி விட்டு வீட்டிலிருந்து 'ஒரு' நண்பியை நினைத்து வரையப்பட்டது..

உன் உள்ளம் தேங்கிண்ணமோ..
வண்ணம் பாலன்னமோ..
நெஞ்சம் பூஞ்சோலையோ....
கண்கள் குற்றாலமோ !!!

நட்சத்திரங்களுக்கு நிலவு துணை...
நதிகளுக்கு கடல் துணை..
கிழமைக்கு ஞாயிறும்,
நல்லுழவனுக்கு வயலுமே துணை....
விதிக்கு மதி துணை...
சதிக்கு, விழிப்புள்ள ஆவல் துணை...
புகலுக்கு ஒழுக்கம் துணை...
ஆயிளுக்கு நல்லருள் துணை...

உன் நினைவென்றும்,
என் மனதின் மகிழ்வுக்கு துணையாகுமே....
என் துக்கங்களை தூளாக்குமே !....

இவண்,
கார்த்தி

காலம் பதில் சொல்லும் !

நிலை: கல்லூரிக்காலம் ( முதுகலை )
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: என்னுயிர் நண்பர்களின் உயரிய உறவில் உருவானது.
காலத்தின் பதில் ??? : வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும் :) ( ஹா ஹா )

பார்க்க அழகானவள்,
பழக எளியவள்
நயமாய் பேசுவாள்
நாகரீகமாய் பழகுவாள்
தவறாய் பேசியதும் இல்லை
தலைவியாய் நினைத்ததும் இல்லை

ஆனாலும் ஏனோ !
நட்பாய் பழகியவளை
நாயகியாய் அவன் நினைத்தான்

அன்பான வார்த்தைகளின்
அர்த்தத்தை மாற்றினான்.

இதயத்தில் அவளை
சிறைவைத்த போதும்
காதலை கூறவுமில்லை - அவளின்
கற்பனையை கலைக்கவுமில்லை !

அன்புத்தங்கை,
அழகான அம்மா,
இவர்கள் பாசத்தில்
இளைப்பாறும் இவளுயிர்..

விடுதி சென்றது முதல்
வீடுவந்து சேரும் வரை..
அங்கு நடந்த செய்திகளை
அடுக்கடுக்காய் இறக்கிவைப்பாள்..

பருவமகன் ஒருவன்
பார்வையால் சீண்டினாலும்..
பயமின்றி கூறிடுவாள்
பாசமிகு பெற்றோரிடம்..

அவள் மறைத்து வைத்தது
எதுவுமில்லை...
அவளுக்கு மனதிற்குள் வைக்கவும்
தெரியவில்லை...

நடந்ததை..
நாடகமாய் உரைப்பவளுக்கு..
நண்பனை..
நாயகனாய் நினைப்பதை
உரைக்க மனமில்லை...

அவளுக்காகவுயிர்வாழும்
அன்பு மனங்கள்..
அதை ஏற்குமோ..
என்றவுள்ளச்சம்.

எதைக்கேட்டாலும்
எதிர்க்காது கொடுப்போர்
அன்பு மகளுக்கு,
ஆசை காதலனை
இணைத்து வைக்க
இசைய மாட்டார்களோ !
இல்லை.....
சாதி மத பேதத்தில்
சதைகளும் ஊறியதால்
சாமர்த்தியமாய் சாடுவார்களோ ?

எம்முடிவை எடுப்பார்கள்
எதுவும் புரியவில்லை
அவளுக்கு...

யோசித்தாள் பல நாட்கள்..

காதலை சொல்லி...
பெற்றவளின் மனதிற்கு
கசப்பூட்ட மனமில்லை..

நட்பெனும் காவியத்தை
காதலெனும் கைகொண்டு
கசக்கவும் விரும்பவில்லை..

இனிய பெற்றோரின்
இன்பத்திற்கு உயிர்கொடுக்கவும்....
நயமான நட்பிற்கு
நாகரீகமாய் கைகொடுக்கவும்..

எடுத்தாள் ஒரு முடிவை !
தடுத்தாள் பல நினைவை !
மறந்தாள் சில கனவை !
மாற்றினாள் அவன் மனதை !
தொடர்ந்தாள் நல் உறவை !

இதற்கு,
இனி,
'காலம் பதில் சொல்லும்'

இவண்,
கார்த்தி..